ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை கண்டறிந்து தாக்குதல் நடத்தி அழித்தது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இரவு நேர டிரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. அதை இந்திய ராணுவம் தடுத்து அழித்ததுடன் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியும் கொடுத்தது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடிக்கும், முப்படை வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து சென்னையில் இன்று தேசிய கொடி ஏந்தி யாத்திரை நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற யாத்திரையில் எச்.ராஜா, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர் .
Category
🗞
News